குழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா!

5 months ago

indonesian-kids-given-chicks-to-get-them-off-smartphones1-1574855445

ஜகார்தா: ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி இருப்பது தான். இந்தியாவிலும் இப்பிரச்சினையின் வீரியம் மிக அதிகம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு நிலைமை இன்னும் மோசம். சாப்பிடுவதற்கு, தூங்க செல்வதற்கு என அனைத்து விஷயங்களுக்கும் செல்போன் இல்லாமல் குழந்தைகளிடம் காரியம் சாதிக்க முடிவதில்லை. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில், உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் தலைக்குனிந்தபடி செல்போனை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் இங்கு ஏராளம்.

இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பெற்றோர்களிடையே தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது போதிய அளவில் இல்லாததால், பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக்கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாட்டில் உ ள்ள பாந்தங் எனும் நகரில் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சு வளர்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோழிக்குஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்னரும் அவற்றிற்கு மாணவர்கள் உணவு அளித்து வளர்க்க வேண்டும். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் பள்ளியிலே வைத்து கோழிக்குஞ்சுகளை வளர்க்கலாம்.

இத்திட்டம் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் செல்போனில் நேரம் செலவிடுவது குறையும் என பெற்றோர்கள் நம்புகின்றனர். எனவே பாந்தாங் நகர அதிகாரிகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்