அப்பாடா.. முடிவுக்கு வரும் வர்த்தக போர்.. அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் வரிகளை குறைக்க ஒப்புதல்

6 months ago

china-usa-flag-1-1573131173

பீஜிங்: அமெரிக்கா மற்றும் சீனா இடையில் நடைபெற்றுவரும் வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளும் கடந்த சில மாதங்களாக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் நிலையில், இருநாடுகளும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் தங்களது வரிகளை ரத்து செய்யும் என்று சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்குள் விதித்துக் கொண்டுள்ள வர்த்தக வரிகளை பல கட்டங்களில் விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாடுகளும் மிக விரைவில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனா மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள வர்த்தக போரினால், இருநாடுகளும் தங்களது ஏற்றுமதி பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பை மேற்கொண்டன. இதனால் சர்வதேச அளவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரை கைவிட ஐ.நா வேண்டுகோள் விடுத்திருந்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீனா மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக போர் குறித்த பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. முதல்கட்டமாக இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது

இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிவிதிப்புகளை நீக்க இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதன்மூலம் வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்று வல்லுநர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீனா மற்றும் அமெரிக்கா தங்களுக்கு இடையில் விதித்துக் கொண்டுள்ள வர்த்தகப் பொருட்கள் மீதான வரிகளை ஒரே நேரத்தில் ஒரே அளவில் நீக்க ஒப்புதல் அளித்துள்ளதாக சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் காவோ பெங் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்கா இடையில் விரைவில் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டவுடன் அமெரிக்காவில் பங்கு சந்தைகள் 120 புள்ளிகள் வரையில் ஏற்றம் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மாத இறுதியில் சீனா மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.


.

சமீபத்திய செய்திகள்