வடக்கு, கிழக்கில் வழிபாடுகளுக்காக வணக்கஸ்தலங்கள் அமைக்கப்படுவதில் தவறில்லை -எஸ்.சிவமோகன்

6 months ago

sivamohan

வடக்கு, கிழக்கில் வழிபாடுகளுக்காக வணக்கஸ்தலங்கள் அமைக்கப்படுவதில் தவறில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது என்பது மத ரீதியாக அரசியலுக்காக பாவிக்கப்படும் விடயம் என்றே நான் பார்க்கின்றேன்.

வெளிப்படையாக தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த விகாரை பொது மக்களின் இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

மாங்குளத்தில் ஒன்று உண்டு. அதுவும் முகாம்களின் உள்ளேதான் உள்ளது. ஏனைய இடங்களில் கட்டப்பட்ட விகாரைகள் அனைத்தும் முழுமையாக முகாம்களின் உள்ளேதான் உள்ளன.

அவை வழிபாடுகளுக்காகவே கட்டப்பட்டவை. அவை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கட்டப்பட்டவை. அவர்கள் தங்களுடைய வழிபாடுகளுக்காகவே அவற்றை கட்டியுள்ளார்கள் என்பது உண்மையே.

அதேநேரம் எல்லா இடங்களிலும் இந்து கோயில்கள் உள்ளன. பௌத்த பிக்குகள் ஆன்மீகத்தை போதித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் இன்று அரசியலில் இறங்கியுள்ளமையால்தான் பிரச்சினை.

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பிரிவு, மகாவலி அபிவிருத்தி, இராணுவம் இந்த 5 பிரிவுகளும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திணைக்களங்கள் என்பது உண்மை” என மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்