தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவர் இவரா ?

2 weeks ago

CVKS-1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இன்றைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டமாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராஜா போன்ற பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குவது தவறானது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரும் இழப்பாக அமையும்.

ஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இளைஞர்கள் வரவேண்டும். அதேவேளையில் வயது மூத்தவர்கள், அனுபவமுள்ளவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பது அல்ல.

அத்துடன் கட்சியின் தலைவரும் அனுபவம் மிக்கவருமான மாவை சேனாதிராஜா நிச்சயமாக யாழ்.மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதுடன் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா ஓய்வுபெற்று அல்லது வேறு காரியங்களில் ஈடுபடும் நோக்கில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மாவை சேனாதிராஜா தான் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்