சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'

1 month ago

Tamil_News_large_2460795

 சீனாவை அச்சுறுத்தும் 'கொரனோ வைரஸ்' எதிரொலியாக, கோவை விமான நிலையத்தில் வெளிநாடு சென்று திரும்பும் பயணியரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சீனாவில் 'கொரனோவைரஸ்' என்ற ஒரு வகை நச்சுக்கிருமி வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்குள்ளவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.'இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என, உலகசுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; அங்கு, மாமிசம் சாப்பிடவேண்டாம்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.'சீனாவுக்கு பயணம் செய்பவர்கள் அங்கு உடல் நலமின்றி இருப்பவர்கள், ஜலதோஷம், சளி ஒழுகும் மூக்குடன் இருப்பவர்களின் அருகில் போக வேண்டாம். மேலும், சீனா சென்று திரும்பும் அல்லது சீனாவில் இருந்து வரும் பயணியருக்கு டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ சோதனைகள் நடத்த வேண்டும்' என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை விமானநிலையத்திலும், பயணியருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து, கோவை சுகாதார நல பணிகள் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் பேசுகையில்,"கோவை விமான நிலையத்தில், சிறப்பு மருத்துவ குழுவினர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் கொரனோ வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்வர். கோவைக்கு, சீனாவில் இருந்து வரும் பயணியரின் எண்ணிக்கை மிக குறைவு, இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.

சமீபத்திய செய்திகள்