ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்தோர் மீது, சமீபத்தில் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். விசாரணையில், அவருடைய பெயர், உஸ்மான் கான், 28, என்பதும், ஏற்கனவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது.
லண்டன் பங்குச் சந்தை கட்டடத்தில் தாக்குதல் நடத்த சதி தீட்டியதாக கைது செய்யப்பட்டு, 2013ல், அவருக்கு, 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவருடைய குடும்பம் இருப்பதும், தன் சிறு வயதில் அங்கு அவர் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 'லண்டன் பாலத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர், ஐ.எஸ்., வீரர்' என, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் அது காட்டவில்லை.