ராஜ்யசபாவிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

9 months ago

Tamil_News_large_2431562

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(டிச.,11) ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர்.

பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான மசோதா, கடும் எதிர்ப்பை மீறி, லோக்சபாவில் நேற்று முன் தினம்(டிச.,9) நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவில் இன்று(டிச.,11) தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மசோதாவை தாக்கல் செய்தார்.

மசோதாவை தாக்கல் செய்து அமித் ஷா பேசுகையில், இந்திய முஸ்லீம்கள், நம் நாட்டின் குடிமக்கள். அவர்கள் மீது அடக்குமுறை ஏதும் கொண்டு வரப்படாது. அவர்கள் கவலைப்பட தேவையில்லை. அசாம் மக்களின் உரிமைகளை பா.ஜ., அரசு காக்கும்' என்றார். தொடர்ந்து அமித் ஷா பேசுகையில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட ராஜ்யசபா நேரலை ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 'அமித்ஷா பேசும் போது, குறுக்கிடக்கூடாது; கூச்சல் போடும் எம்.பி.,க்களின் பேச்சு பதிவு செய்யப்படாது' எனவும் சபாநாயகர் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.

தொடர்ந்து நடந்த விவாதத்தின் போது, 'குடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூடான் நாடுகளை சேர்ந்தவர்களை சேர்க்காதது ஏன்?' என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பினார். ஹிந்துத்துவாவை முன்னெடுப்பதற்காக இந்த மசோதாவை பா.ஜ., கொண்டுவந்துள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார். பலஉறுப்பினர்கள், விவாதத்தில் பங்கெடுத்து பேசிய பின்னர், பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
அமித் ஷா பேசியதாவது: குடியுரிமை சட்ட திருத்த மசோதா முஸ்லிம் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானது அல்ல. இது அரசியல் சாசன பிரிவு 14க்கு எதிரானது அல்ல. இம்மசோதா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தவறான தகவல்களை பரப்புகிறார். வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

இந்தியா, பாக்., பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால், இம்மசோதாவுக்கு தேவை இருந்திருக்காது. மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது ஏன்? பிரிவினைக்கு காரணம் ஜின்னா தான் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு காங்., எப்படி ஒப்புக் கொண்டது. காங்., கட்சி, தாங்கள் எதை செய்தாலும் மதச்சார்பின்மை என மக்களை ஏமாற்றுகிறது.

இதனைதொடர்ந்து குடியுரிமை மசோதாவை தேர்வுகுழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்., மற்றும் இடதுசாரிகள் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்காக நடந்த ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 99 எம்.பி.,க்களும், எதிர்பாக 124 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர். பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, இத்தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
லோக்சபாவில் இம்மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த சிவசேனா, ராஜ்யசபாவில் இம்மசோதா மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன.
இதனைதொடர்ந்து மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. இதில், 125 எம்.பி.,க்கள், மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்; 105 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

சமீபத்திய செய்திகள்