கண்டன தீர்மானம் நியாயமல்ல!' : அமெரிக்க அதிபர் டிரம்ப்

9 months ago

Tamil_News_large_2434184

என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது சிறிதும் நியாயமல்ல என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, ஐரோப்பிய நாடான உக்ரைனின் உதவியை, டிரம்ப் நாடியதாக புகார் எழுந்தது. அத்துடன், தன் மீதான புகாரை, பார்லி.,யில் விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, அதிபர் டிரம்ப் மீது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பார்லி.,யில், 14 மணி நேரம் விவாதம் நடந்தது. இந்நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில், டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீது, பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடத்த, நீதித்துறைக்கான பார்லி., குழு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, பார்லி.,யின் பிரதிநிதிகள் சபைக்கு, கண்டன தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு, பெரும்பான்மை பலம் உள்ளது, அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபைக்கு தீர்மானம் அனுப்பப்படும். அங்கு டிரம்பின், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.இந்நிலையில், தன் மீதான கண்டன தீர்மானத்துக்கு, பார்லி..யில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், அவர், 123 முறை, 'டுவிட்' செய்துள்ளார்.அவர், அதில் கூறியிருப்பதாவது:நான் அதிபராக பொறுப்பேற்ற பின், நாடு வளர்ச்சியடைந்துள்ளது. நான் எந்த தவறும் செய்யாத நிலையில், என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது, எந்த விதத்திலும் நியாயமில்லை. ஜனநாயக கட்சி, இப்போது வெறுப்பு கட்சியாக மாறிவிட்டது. அவர்கள், இந்நாட்டின் அழிவு சக்திகளாக மாறி விட்டனர்.என் மீதான கண்டன தீர்மானம், நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம். இதற்குமுன் இப்படி நடந்ததில்லை. மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். இவ்வாறு, டிரம்ப் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்