யுத்த பிரதேசமாக காட்சி தரும் யாழ் !

4 days ago

Suresh Premachandran

கொரோனாக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இராணுவ கெடுபிடிகள் அதிகமாக உள்ளது.எனினும் தென்னிலங்கையில் இவ்வாறான கெடுபிடிகள் இல்லை.

கொரோனா அச்சுறுத்தல் இல்லாத யாழ் பிரதேசத்தில் திணிக்கப்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகள் மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து செய்வோர்  பதிவு செய்து செல்லவேண்டியுள்ளது.மேலும்  முல்லைத்தீவில் இராணுவம் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டுகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவும்  காலப்பகுதியில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன் . அவர்கள் தொடர்பான முறைப்பாடுகளும்  அதிகரித்துள்ளன. தேவைக்கு மேலதிக இராணுவ குவிப்பு மற்றும் விபரங்கள் திரட்டுவது தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனாவிற்கு எதிரே போராடுவது என்பது சுகாதார ரீதியில் போராடுவதேயன்றி, துப்பாக்கிக் கொண்டு போராடுவது அல்ல என சுட்டிக்காட்டிய அவர்  ஆனையிறவு தாண்டி வரும்போது இருமருங்கிலும் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ள காட்சி யாழ் இன்னும்  யுத்த பிரதேசமாக உள்ள ஓர் உணர்வைத் தருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்