சவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்!

9 months ago

Tamil_News_large_2434016

 

 சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம், வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவிற்கு வந்திருக்கும் ஹிந்து, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் இது.லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு நாள் கழித்து ராஜ்யசபாவில் நிறைவேற்ற தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இடைப்பட்ட நாளில், பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில் என்ன நடந்தது என்பதை, ஒரு தமிழக எம்.பி., விரிவாக விளக்கினார்.எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் கூடியிருந்தனர். தி.மு.க.,- எம்.பி., சிவாவும், சிவசேனா மூத்த எம்.பி., சஞ்சய் ராவத்தும் ஒன்றாக இருந்தனர். 'லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறி விட்டது.

ஆனால், ராஜ்யசபாவில் இதை நிறைவேற்ற விட மாட்டோம். இங்கே, பா.ஜ.,விடம் பெரும்பான்மை இல்லை. மசோதாவை தோற்கடிக்க, எங்களிடம் ஒரு ரகசிய திட்டம் உள்ளது. அமித் ஷாவின் முகத்தில் கரியைப் பூசுவோம்' என, இந்த இருவரும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களிடம் மார்தட்டிக் கொண்டனர். பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பா.ஜ., - எம்.பி.,யும், அமித் ஷாவிற்கு நெருக்கமானவருமான பூபேந்தர் யாதவ், 'எங்களுக்கு ஆதரவாக, 125 எம்.பி.,க்கள் உள்ளனர்; இது, பெரும்பான்மையை விட அதிகம்; உங்கள் முகத்தில் தான் கரி பூசப்பட உள்ளது' என்றார். ஆனால் சிவாவும், சஞ்சய் ராவத்தும், 'பார்த்துக் கொண்டேயிருங்கள்... உங்கள் முகத்தில் கரி பூசுவது நிச்சயம்' என, அதீத நம்பிக்கையுடன் சவால் விட்டனர்.

கடைசியில், குடியுரிமை மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. சிவாவுடன் கை கோர்த்து சவால்விட்ட சஞ்சய் ராவத் கூட, அரசுக்கு எதிராக ஓட்டளிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டார். 'அவ்வளவு நம்பிக்கையுடன் பேசினீர்களே, என்னாச்சு உங்க ரகசிய திட்டம்' என, மற்ற எம்.பி.,க்கள் கேட்க, சிவாவும், சஞ்சய் ராவத்தும் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர்.'சிவாவின் பதவிக்காலம் இன்னும் நான்கே மாதங்களில் முடியப்போகிறது; எதற்கு இவருக்கு இந்த தேவையில்லாத வேலை' என, சில எம்.பி.,க்கள் கேட்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்