தமிழுடன் சுப்ரீம் கோர்ட் தகராறா?

1 year ago

Tamil_News_large_2311823

சுப்ரீம் கோர்ட் கோர்ட் தீர்ப்புக்களை முதல் முறையாக ஆங்கிலம் தவிர 5 பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. இதில் தமிழ் இடம் பெறவில்லை.

உலகம் முழுவதும் கோர்ட் தீர்ப்புகள் ஆங்கிலம் அல்லது அந்நாட்டின் ஆட்சி மொழியில் மட்டுமே பிறப்பிக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் வருகின்றன. ஆனால் தற்போது ஆங்கிலம் தவிர இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், ஒடியா ஆகிய 5 மொழிகளிலும் தீர்ப்பு விபரங்களை மொழிபெயர்த்து பதிவேற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. மேலும் பல பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புக்களை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதற்கான சாப்ட்வேர் சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்டு, எலக்ட்ரானிக் சாப்ட்வேர் பிரிவினரால் மொழிமாற்றம் செய்யப்பட்டு பதிவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார். 
அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் தீர்ப்பு விபரங்கள் வெளியிடும் பணி துவங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான யோசனையை 2017 ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி இருந்தார். இதனையடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வந்தது.

பெரும்பாலான வட மாநிலங்களில் இந்தி பேசப்படுவதால் இந்திய மொழியிலும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர்களுக்காக மற்ற 4 மொழிகளிலும் மொழிபெயர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய மொழிகளில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 
ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அதிக அளவிலான வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகள் ஆகியன தமிழகத்தில் இருந்தே தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மொழிபெயர்க்கும் பிராந்திய மொழிகளில் தமிழை சுப்ரீம் கோர்ட் சேர்க்காதது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்