தொடரை இழந்தது இந்தியா: நியூசிலாந்திடம் மீண்டும் தோல்வி

1 month ago

Tamil_News_large_2475935

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இந்தியா. இதன்மூலம் ஒருநாள் தொடரை 0-2 என இழந்தது.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்தது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி, சகால் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, சான்ட்னருக்கு பதில் சாப்மேன், ஜமிசன் இடம் பெற்றனர்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிகோல்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது நிகோல்ஸ் (41), சகால் சுழலில் சரிந்தார். கப்டில் (79) அரைசதம் எட்டினார். பின் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பிளண்டல் 22 ரன் எடுத்தார். 'சுழலில்' லதாமை (7) அவுட்டாக்கிய ஜடேஜா, தனது துல்லிய 'த்ரோவில்' நீஷத்தை (3) வெளியேற்றினார். கிராண்ட்ஹோம் (5), சாப்மேன் (1), சவுத்தீ (3) அடுத்தடுத்து அவுட்டாகினர். 9வது விக்கெட்டுக்கு இணைந்த ராஸ் டெய்லர் (73), ஜமைசன் (25) இணைந்து, 76 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சகால் 3, ஷர்துல் தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டி விடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மயங்க் (3) மறுபடியும் ஏமாற்றினார். வேகமாக விளாசிய பிரித்வி ஷா 24 ரன்னுக்கு (6 பவுண்டரி) வெளியேறினார். கோஹ்லி, ஸ்ரேயாஸ் இணைந்தனர். சவுத்தீ 'வேகத்தில்' கோஹ்லி (15) போல்டானார். லோகேஷ் ராகுல் அணியை மீட்க கைகொடுப்பார் என நம்பப்பட்டது. இவர் 4 ரன்னுக்கு போல்டாக, இந்திய அணி 71/4 ரன் என தடுமாறியது. கேதர் ஜாதவும் (9) அணியை கைவிட்டார்.

ஸ்ரேயாஸ் ஐயர் (52) அரைசதம் அடித்தார். ஷர்துல் தாகூர் 18 ரன் எடுக்க, நவ்தீப் சைனி 45 ரன்கள் எடுத்து அசத்தினார். சகால் (10) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் போராடிய ஜடேஜா, ஒருநாள் அரங்கில் 10வது அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி 48.3 ஓவரில் 251 ரன்கள் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஒருநாள் தொடரை 0-2 என இழந்தது.

சமீபத்திய செய்திகள்