ஜோதிகாவின் ராட்சசியை புகழ்ந்து தள்ளிய மலேசிய கல்வி அமைச்சர்.. செம பாராட்டு

2 months ago

maszlee-malik-malaysian-education-minister-1567512173

தமிழ் படமான ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் வெகுவாக புகழ்ந்து பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் மலேசியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி முறை மாற்றங்களை ராட்சசி அழகாக சித்தரித்துள்ளதாக கூறியுள்ளார். கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ராட்சசி. இந்த படத்தின் கதை என்பது ஓர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்கும் கீதா ராணி (ஜோதிகா) நல்ல ஒழுக்கமான விதிமுறைகளை பின்பற்றி எப்படி சிறந்த பள்ளியாக அதை மாற்றுகிறார் என்பதே கதை.

இந்த படத்தை மலேசியாவில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தனது அமைச்சக அதிகாரிகளுடன் சேர்ந்து சனிக்கிழமை பார்த்து ரசித்துள்ளார். பின்னர் படம் குறித்து தனது கருத்துக்களை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தமிழ் படமான ராட்சசி மலேசியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி முறை மாற்றங்களை அழகாக சித்தரித்துள்ளது. இந்த படத்தில் எனது ஆசைகளான மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் எனது திட்டம் (அடுத்த ஆண்டு மலேசியாவில் அமலுக்கு வருகிறது) குறித்தும் பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற எனது ஆசைகளையும் அழகாக காட்டியுள்ளார்கள்.
ராட்சசி படம் அசாதாரணமான கதைகளத்தையும், முக்கிய ரோலில் ஜோதிகாவின் அபார நடிப்பையும் கொண்டுள்ளது. கீதா ராணி என்ற சூப்பர் ஹீரோ ரோலில் ஜோதிகா நடித்துள்ளார். பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதே தவறு என்பதை இப்படத்தின் கேரக்டர் வாயிலாக நிரூபித்துள்ளார் ஜோதிகா. பள்ளி மாணவர்களின் தோல்விகள் குறித்து ராட்சசி படம் பேசுகிறது. இந்த படத்தில் கீதா ராணியாக வரும் ஜோதிகா காவல்துறை உதவியுடன் மாணவர்களின் தோல்விக்கான காரணிகளுக்கு தீர்வு காண்கிறார்கள் . இதில் தான் மட்டும் செய்யாமல் அனைவரையும் ஈடுபடுத்துகிறார்கள்.
மலேசியாவில் இதைத்தான் நாம் செயல்படுத்தும் முயற்சியை அமல்படுத்த உள்ளோம். இனிமேல் மாணவர்கள் தோல்விகள் இருக்கக்கூடாது என்ற நோக்கில் அனைத்து கோணங்களிலும் அமலாக்கம் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என்றார். அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் இந்த பதிவு சமூக வலைதளங்களில வைரலாக பரவி வருகிறது. 

 

சமீபத்திய செய்திகள்