என் பெயர் எதுக்கு: பிரியங்கா சலிப்பு

1 year ago

Tamil_News_large_2333917

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் எனது பெயரை இழுக்க வேண்டாம் என அக்கட்சி பொது செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல், ராஜினாமா செய்தார். ஆனால், அவர் தான் தலைவராக நீடிக்க வேண்டும் என, மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் பல முறை வலியுறுத்தினர். இதனை ஏற்காத ராகுல் தனது முடிவில் உறுதியாக உள்ளார். 
புது தலைவர் தேர்வில், தனது குடும்பத்தினர் பெயரை பரிசீலனை செய்ய வேண்டாம் கூறிவிட்டார். இதனால், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. புது தலைவர் , பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு பிறகு, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடும். இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேதி இறுதி செய்யப்பட்டதும் அறிவிக்கப்படும். செயற்குழுவில், ராகுலும் உறுப்பினராக உள்ளார். இதனால், கூட்டத்தில் அவரும் கலந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார். பார்லிமென்ட் தொடர், வரும் 7 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ராகுலுக்கு பதிலாக, அவரது சகோதரி பிரியங்காவை புதிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என எம்.பி., சசிதரூர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆக.,20 ல் நடக்கும் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் பொது செயலர்கள், பல மாநில பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளர் ஆர்பிஎன் சிங் பேசும் போது, பிரியங்கா தாமாக முன்வந்து தலைவர் பதவியை ஏற்று கொள்ள வேண்டும் எனக்கூறினார்.

அப்போது, பிரியங்கா, தலைவர் பதவிக்கான பரிசீலனையில் எனது பெயரை இழுக்க வேண்டாம். இதை நான் விரும்பவில்லை என கூறிவிட்டதாக, அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார். 

 

சமீபத்திய செய்திகள்