இஸ்லாமிய நாடுகளுடன் ஆலோசனை நடத்த முடிவு.. காஷ்மீர் பிரச்சனையை கையில் எடுக்கும் சவுதி.. பாக். பிளான்

7 months ago

saudi222-1577603821

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் சவுதி அரேபியா விரைவில் இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பு உடன் ஆலோசனை நடத்தும் என்று கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களாக மலேசியா மற்றும் சவுதி அரேபியா இடையில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக இஸ்லாமிய பிரச்சனைகளில் இரண்டு நாடுகளின் நிலைப்பாடு வித்தியாசமாக இருப்பதால் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அதிக பிரச்சனை நிலவி வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் கடந்த வாரம் நடந்த இஸ்லாமிய நாடுகளுக்கான மாநாட்டில் சவுதி அரேபியா கலந்து கொள்ளவில்லை. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் சவுதி அழுத்தம் கொடுத்தது. இதனால் மலேசியாவின் மாநாட்டில் கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளாமல் விலகியது.

ஆனால் பாகிஸ்தான் சவுதியின் அழுத்தத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் தனது முடிவிற்கு கைமாறாக வேறு விதமான அழுத்தத்தை சவுதிக்கு கொடுத்தது. அதன்படி காஷ்மீர் பிரச்னையை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு விவாதிக்க வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் மலேசியாவின் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அழுத்தம் கொடுத்தது.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியா சொன்னது போல மலேசியாவின் கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை. இதனால் தற்போது காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதற்காக இஸ்லாமியா நாடுகளின் கூட்டமைப்பை கூட்டத்தை சவுதி விரைவில் கூட்ட இருக்கிறது.

இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் மொத்தம் 56 நாடுகள் உள்ளது. சவுதி, ஓமன், ஈரான், துருக்கி, ஈரான், ஈராக், குவைத், மலேசியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் என்று முக்கியமான நாடுகள் பல இந்த பட்டியலில் இருக்கிறது. இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றாக கூடி காஷ்மீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்

இதில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் இன்னும் இதற்கான தேதி குறிக்கப்படவில்லை. இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் சவுதி அரேபியா காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதம் செய்ய திட்டமிடுவது உலக அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்