குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

9 months ago

Tamil_News_large_2430325

குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 9 மணி நேர நீண்ட விவாதத்துக்குப்பின், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர்.

பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று(டிச.,9) மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபாவில் தாக்கல் செய்தார். விவாதத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். ஆனால் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஓவைசி, மசோதாவின் நகலை கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளும் மசோதாவை எதிர்த்தன. மசோதாவுக்கு அதிமுக., முழு ஆதரவு தெரிவித்தது.

மசோதா மீது 9 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. இதனையடுத்து லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்