நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி - பாண்டவர் அணி

1 year ago

NTLRG_20190618124637837944

நடிகர் சங்க தேர்தலை நடத்த விடாமல் செய்ய பல்வேறு சதிகள் நடந்து வருவதாக பாண்டவர் அணி குற்றம் சாட்டி உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கிறது. இங்கு தேர்தல் நடத்த போலீஸ் தரப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தேதியில் இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் எஸ்விசேகரின் நாடகம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் நாசர், கருணாஸ், பூச்சி முருகன், கோவை சரளா உள்ளிட்ட பாண்டவர் அணியினர். அவர்கள் பேசும்போது : நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடத்தை தேர்வு செய்தது தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி தான். எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பது அரங்கத்தில் மட்டும் தான். தேர்தல் நடத்த போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட அன்றைய தினம் தான் எஸ்வி சேகர் நாடகம் நடத்த இந்த கல்லூரியில் முன்பதிவு செய்திருக்கிறார். நாங்கள் கடந்த மே மாதமே மொத்த கல்லூரி வளாகத்தையும் முன் பதிவு செய்துள்ளோம்.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி போன்றவர்கள் தேர்தலை கூட சந்தித்தார்கள். ஆனால் இப்போது போட்டியிடுபவர்கள் தேர்தலை சந்திக்கவே தயங்குகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலை நடத்த விடாமல் செய்ய பல்வேறு சதிகள் நடக்கின்றன. இதற்கு பின்னணியில் ஐசரி கணேஷ் உள்ளார். இருந்தாலும் அரசியல் பின்னணி இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்