தற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை: அமெரிக்கா

1 year ago

gallerye_113625978_2215059

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.

காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கொடூர தாக்குதலுக்கு, 44 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக , இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம், காஷ்மீர் தாக்குதல் குறித்து தோவல் விளக்கி கூறினார். 

இந்த ஆலோசனை தொடர்பாக ஜான்போல்டன் கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்து கொள்ள அனைத்து உரிமையும் இந்தியாவிற்கு உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பின்னணியில் இருந்து செயல்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக 2 முறை அவரிடம் நான் பேசியுள்ளேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்து கொள்கிறது. எந்தவொரு நாடும் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பின் போது, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் தருவதை தடுக்கும் வகையில், இணைந்து செயல்பட இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் ஒப்பு கொண்டனர். ஐ.நா., தீர்மானத்தின் கீழ் பாகிஸ்தான் செயல்பட வேண்டும் மற்றும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் இணைக்க தடையாக உள்ளவற்றை நீக்கவும், இணைந்து பணியாற்றவும் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்