சிவாஜியை எச்சரித்த செல்வம்

4 months ago

selvam-adaikalanathan-720x4801

எமது கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். நாளைய தினம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.

எமது கட்சி ஒழுக்கமான கட்டுக்கோப்புள்ள ஒரு கட்சி. ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது எமது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

இதேவளை, இந்த தேர்தலை பகிஷ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை. வெற்றிபெறக் கூடியவருக்கு வாக்கை அளிக்காமல் வேறு ஒருவருக்கு அளித்தால் அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் எம்மை பழி வாங்குவார்கள் என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இருக்கிறது.

அத்துடன் கோட்டபாய தொடர்பாகவும் எமது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் எதிர்க்கின்ற ஒருவரை மீண்டும் கொண்டுவந்து விடுமோ என்ற பிரச்சினை இருக்கிறது.

அத்துடன் நாம் சரியான ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை, அவர்கள் அந்த கட்சிகளோடு இல்லை என்ற தோற்றப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலையும் உள்ளது.

எனவே எம்மை பொறுத்த வரை வெற்றிபெறும் வேட்பாளரிடம் எமது கோரிக்கையினை முன்வைத்து அதை நடைமுறைபடுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்