ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை!

1 month ago

unp logo

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலை 90 சதவீதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவியினையும், பிரதமர் வேட்பாளராக சஜித்தினை களமிறக்குவதற்கும் ரணில் அணி இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும், புதிய கூட்டணியின் செயலாளராக யாரை நியமிப்பது என்பதிலேயே தற்போது சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு சஜித் அணியும், ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகிய மூவரில் ஒருவரை நியமிப்பதற்கு ரணில் அணியும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் இதுகுறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதியாக நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை இவர்கள் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்