காஷ்மீர் விவகாரம்.. ஐ.நா. கதவை தட்டி மூக்கறுப்பட்ட பாக். பிரதமர் இம்ரான்கான்!

4 months ago

india-pakistan-1-1565324497

ஜெனீவா: சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் விவகாரமானது இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினை என தங்கள் உதவியை நாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா பதில் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு கடந்த திங்கள்கிழமை நீக்கப்பட்டது. மேலும் அதற்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசியபோது இந்தியாவின் இந்த நகர்வு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்புவோம் என்றார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில் இன அழிப்புக்கு இந்தியா திட்டமிடும். அங்கிருந்து உள்ளூர் மக்களை வெளியேற்றிவிட்டு பிற பகுதிகளை சேர்ந்தவர்களை குடியமர்த்தி பெரும்பான்மையினராக மாற்ற முயற்சி என்றும் இம்ரான் கான் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவை எதிர்த்து ஐநா பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் நாடியது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் சில கருத்துகளை தெரிவித்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய பகுதியில் உள்ள காஷ்மீரில் சில கட்டுப்பாடுகளை இந்தியா விதித்திருப்பதாக வந்த செய்தி குறித்து பொதுச் செயலாளர் கவலையடைந்துள்ளார். இது மனித உரிமை சூழல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜம்மு காஷ்மீரின் நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் விவகாரத்தில் எந்த ஒரு மூன்றாவது நாடும் மத்தியஸ்தம் செய்யக் கூடாது. இதை இந்தியாவும் பாகிஸ்தானுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என குட்டரேஸ் தெரிவித்ததாக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கெனவே அமெரிக்க அதிபர் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதாக கூறி இந்தியாவின் எதிர்ப்பை சந்தித்தார். பின்னர் இது இருதரப்பு பிரச்சினை என அமெரிக்கா சுட்டிக் காட்டியது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஐநா கதவை தட்டிய நிலையில் அதுவும் கைவிரித்து விட்டது. 

சமீபத்திய செய்திகள்