சுகாதாரமற்ற யாழ்.போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை!

7 months ago

bad food

யாழ்.போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் யாழ்.நகர் பொது சுகாதார பரிசோதகரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிற்றுண்டிச்சாலையில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத சிற்றுண்டிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளரினால் யாழ்.நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்தே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அவர் மீது 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், எதிராளி குற்றத்தை ஏற்காத நிலையில், 50 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல உத்தரவிட்ட மேலதிக நீதவான் காயத்திரி சைலவன், கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கினை மேலதிக விசாரணைக்காக வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, மேற்குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு கடந்த ஜனவரி மாதமும் யாழ்.நகர் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு யாழ். மேலதிக நீதவான் காயத்திரி சைலவன் இனால் 35000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்