வடக்கு – கிழக்கு பிரதேசங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்துவேன் - கோட்டா

7 months ago

gota

யுத்தத்தினால் பாதிக்கபட்ட வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளைவிட பின்தங்கிய நிலையில் இருப்பதால் அப்பிரதேசங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் இராணுவக் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் 90 வீதமானவை மஹிந்த ஆட்சியிலேயே விடுவிக்கப்பட்டடதுடன் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ள கோட்டாபய, பூகோள அரசியலைப் பொறுத்தவரையில் நடுநிலை வகிப்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு முதலாவது தடவையாக இன்று (செவ்வாய்க்கிழமை)  ஷங்க்ரிலா நட்சத்திர ஹோட்டலில்  இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைளை தீர்த்து வைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 13 பிளஸ்  அடிப்படையில் தீர்வு அமையும் என்று தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுடனான நல்லிணக்கம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? – என்று கேள்விக்கு பதில் அளித்த கோட்டாபய ராஜபக்ஷ,

“நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் கௌரமாக வாழக்கூடிய நிலைமை உருவாக்கப்படவேண்டும். சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து வகையிலும் அனைத்து பிரதேச மக்களும் சிறந்த வாழ்கை தரத்தை பெறவேண்டும். அந்தவகையில் வடக்கு – கிழக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வடக்கு – கிழக்கு விவகாரத்தைப் பொறுத்த வரையில் மஹிந்த ஆட்சியை இரண்டாகப் பார்க்க வேண்டும்.

முதலாவது, போரை நிறைவுக்கு கொண்டு வந்தவர். அடுத்தது, போருக்கு பின்னரான பெருமளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டமை போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அடிப்படைத் தேவைகளை பெருமளவு நிறைவேற்றியமை.

வீதியமைப்பு, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், மீள்குடியேற்றம், நீர்பாசன புனரமைப்பு என்று பெருமளவு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுதொடர்பாக யாரும் பேசுவதில்லை.” என்று பதில் தெரிவித்துள்ளார்.

தவிர, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு தொடர்பான கேள்விக்கான பதிலை நேரடியாக தெரிவிப்பதை கோட்டாபய ராஜபக்ஷ தவிர்த்திருந்மையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மேலும், பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்த கோட்டாபய, தற்போதைய நுாற்றாண்டு, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், தொழில் நுட்பத்துறையில்  அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அதற்காகவே, தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கு பெருந்தொகையை ஒதுக்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பூகோள அரசியல் நிலைப்பாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கோட்டாபய ராஜபக்ஷ, இந்தப் பிராந்தியத்தை மையைப்படுத்தி பல்வேறு நாடுகளும் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் எந்தவொரு தரப்பையும் சார்ந்திருக்காது நடுநிலையாக இருப்பதே தன்னுடைய நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்