தமிழ் கட்சிகளுக்குள் இருக்கும் பிணக்குகளை ஓரங்கட்ட வேண்டும் - வடிவேல் சுரேஷ்

6 months ago

Vadivel.Suresh

நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தமிழ் கட்சிகளுக்குள் இருக்கும் பிணக்குகளை ஓரங்கட்ட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக்கொண்டது.

அதேநேரத்தில் தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்கு மட்டுமின்றி நாட்டில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துகின்றார்களா என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அத்துடன், மலையகத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி வழங்கப்பட்டது.

எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்பாக இந்த ஆயிரம் ரூபாயை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டாயமாக இந்த ஆயிரம் ரூபாய் தைப்பொங்கலுக்கு முன்பு கிடைத்தால் நல்லது என எதிர்பார்க்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்க முதல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் எனது நண்பர்களே. எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளர் என்ற வகையில் ஐ.தே.க. மற்றும் சஜித் பிரேமதாசவுடனேயே எனது பயணம் தொடரும். எமது இலக்கு அடுத்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று சஜித்தை பிரதமராக்குவதாகும்.

கல்வி, கலாசாரம், தொழில் வாய்ப்பு மற்றும் வீட்டுத்திட்டம் என பல்வேறு தேவைகள் மக்களுக்கு உள்ளது. அவை நிறைவெற்றப்பட வேண்டும். அதற்கு ஒரு சிறந்த தலைமை வேண்டும்.

அதேநேரத்தில், மலையகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் 25பேர் இம்முறை நாடாளுமன்றத்தில் தெரிவாவார்கள். அதேபோல் முஸ்லிம் சமூகத்தில் 20 பேர் தெரிவாவார்கள். மலையகத்தில் 16 பேர் தெரிவாக வேண்டும். ஆனால் 9 பேரே காணப்படுகின்றனர். 7 பேரை இழந்துவிட்டோம்.

அதனை மீட்டெடுத்து அரசியல், தொழிற்சங்கப் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மலையக அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்